அழகிய தமிழ் மகன் – Tamil Cinema Review

November 14, 2007 at 4:12 pm Leave a comment

ஏறத்தாழ 5000 அடி படம். மராத்தான் ரேசில் ஓடிய களைப்பை ஏற்படுத்த வேண்டிய ஃபுட்டேஜ். ஆனாலும் விஜய் ஏறியிருக்கும் இந்த இரட்டை குதிரை சவாரி ‘பலே வெள்ளையத்தேவா’ ரகம்!

மகளின் காதலுக்கு ‘ஊஹ§ம்’ சொல்வாரென்று எதிர்பார்த்தால் ‘ம்’ சொல்கிறார் ஸ்ரேவின் அப்பா ஆசிஷ்வித்யார்த்தி. வில்லன் இல்லாத காதலில் சுவாரஸ்யம் ஏது? வில்லனாக வருகிறார் இன்னொரு விஜய். இருவருக்கும் நடக்கிற எசகுபிசகான யுத்தத்தின் முடிவு என்ன? இதில் ஈ.எஸ்.பி என்ற புதிய சமாச்சாரத்தையும் கலந்து அழகிய திரை மகனை தந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் பரதன்.

திடீரென்று கைகள் உதற, எதிர்கால பயங்கரங்களை உணருகிறார் விஜய். அவர் உணர்வது போலவே அடுத்தடுத்த பயங்கரங்களும் நிகழ்கிறது. ஒரு சந்தர்பத்தில் தான் நேசிக்கிற காதலியை தானே கொல்வது போலவும் உணருகிறார். அருகில் இருந்தால்தானே அந்த கொலை நிகழும்? மும்பைக்கு பறக்கிறார். அங்கே…? இன்னொரு விஜய்! அதிர்ச்சிக்குள்ளாகும் அவர் சுதாரிப்பதற்குள் ஒரு விபத்து. மீண்டும் அவர் கண்விழிக்கும் ஒரு மாதத்திற்குள் என்னென்னவோ நடந்துவிடுகிறது. பதறியடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பும் விஜய், வில்லன் விஜயோடு மோதும்போதுதான் கனவில் உணர்ந்த அந்த சம்பவம் நடந்தேறுகிறது. அட தேவுடா..! பிழைத்தாரா ஸ்ரே? இருக்கையின் நுனிக்கு தள்ளி சுபம் போடுகிறார்கள்.

கள் குடித்த காளை மாதிரி, ச்சும்மா தூள் கிளப்பியிருக்கிறார் வில்லன் விஜய். சிகரெட்டை எடுக்கிற ஸ்டைலும், அதை பற்ற வைக்கிற அழகும், ‘என்னென்னவோ செய்றோம், இதை செய்ய மாட்டோமா?’ என்ற பஞ்ச் டயலாக்கும், விஜய் வருகிற போதெல்லாம் திமிலோகப்படுகிறது தியேட்டர். போகிற போக்கில் ஒரு காதல் குழியை வெட்டி, அதில் நமீதா என்ற புள்ளி மானையும் தள்ளிவிட்டு போகிற அலட்சியம் இருக்கிறதே, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மாதிரி இது விஜயாட்டம்!

மற்றொரு விஜய்க்கு, காதலியையும், தன் காதலையும் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம். எந்த காயை நகர்த்தினாலும், அங்கே ஒரு ‘செக்’ வைக்கிறார் வில்லன் விஜய். எப்படிப்பா இதெல்லாம் என்று யோசிக்கிற நேரத்தில், விஜயின் டைரியை படித்துவிட்டுதான் அதெல்லாம் என்று முடிச்சை அவிழ்க்கிறார் இயக்குனர். இரண்டு விஜய்களில் யார் உண்மையான காதலர் என்பதை ஸ்ரேயா அடையாளம் கண்டு கொள்கிறபோது பதற்றம் தொற்றிக் கொள்கிறது கதையில்!

ஸ்ரேயாவுக்கு டூயட் ஆட மட்டுமல்ல. நடிக்கவும் சிறிது வாய்ப்பளித்திருக்கிறார்கள். வாழ்க! தணிகலபரணியை மடக்குகிற ஸ்ரேயா, கீதாவின் முன், குத்துவிளக்காக பளபளப்பது அழகு! ஒரு பாடலுக்கு விஜய்க்கு கம்பெனி கொடுத்து, கடைசியில் வயிற்றை தள்ளி கொண்டு வந்து நிற்கிறார் நமீதா.

சில காட்சிகளே வந்தாலும் கஞ்சா கருப்புவின் காமெடி ‘போதை’தான்!

படம் முழுக்க ‘ஒளி’வீசுவது கேமிராமேன் பாலசுப்ரமணியெம்தான்! இரண்டு விஜய்களையும் மோத விடுகிறபோது வித்தை காட்டுகிற கேமிரா, சண்டை காட்சிகளின் பயங்கரங்களை அப்படியே உள்வாங்கியிருக்கிறது.

ரஹ்மானின் இசையில் ‘பொன்மகள் வந்தாள்’ ரீமிக்சும், ‘மதுரைக்கு போகாதடி’ பாடலும் மனசை விட்டு அகல சில மாதங்கள் பிடிக்கும்.

ஒரு விஜய் இருந்தாலே உரியடி திருவிழா! இங்கே இரண்டு விஜய்..! கேட்கவேண்டுமா? கிடாவெட்டி பொங்கலே வைத்திருக்கிறார்கள்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Entry filed under: Vijay Film Reviews.

FI R on Diwali Releases! Who lit the torch for Diwali?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Categories

Recent Posts

Blog Stats

  • 26,874 hits

%d bloggers like this: